மகராஜகடை அருகே கழுத்தில் கயிறு இறுக்கி சிறுமி சாவு ஊஞ்சல் விளையாடியபோது பரிதாபம்


மகராஜகடை அருகே கழுத்தில் கயிறு இறுக்கி சிறுமி சாவு ஊஞ்சல் விளையாடியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 24 April 2019 10:45 PM GMT (Updated: 2019-04-25T01:03:20+05:30)

மகராஜகடை அருகே ஊஞ்சல் விளையாடிய போது கயிறு இறுக்கி சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

குருபரப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ். கூலிதொழிலாளி. இவருடைய மகள் பூர்ணிமா (வயது 8). இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் கோடை விடுமுறைக்காக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதனால் நேற்று சிறுமி பூர்ணிமா யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் கயிறு மூலம் கட்டப்பட்டுள்ள ஊஞ்சலில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு சிறுமியின் கழுத்தை சுற்றி இறுக்கியது. இதனால் சிறுமி அலறி துடித்தாள். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் தந்தை ராஜேஷ் விரைந்து வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூர்ணிமாவை கிருஷ்ணகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி பூர்ணிமா பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்து மகாராஜகடை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊஞ்சல் விளையாடிய போது கயிறு இறுக்கி சிறுமி இறந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story