தமிழ்நாடு-புதுச்சேரியில் நாளை முதல் 2 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்


தமிழ்நாடு-புதுச்சேரியில் நாளை முதல் 2 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 April 2019 3:45 AM IST (Updated: 25 April 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு-புதுச்சேரியில் நாளை முதல் 2 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது என வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு பொதுச் செயலாளர் கூறினார்.

தஞ்சாவூர்,

மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தை எதிர்க்கிறோம். இந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். இறப்பு சான்றிதழ் பெறுவதில் தமிழக அரசு பழைய நிலையே நீடிக்கும் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

தேனி மாவட்டத்தில் சாட்சி கூண்டில் நின்ற போலீஸ் அதிகாரி, எதிர்தரப்பினரை நீதிமன்ற வளாகத்திலேயே மிரட்டியதை கண்டிக்கிறோம். அவரை பணியிடை நீக்கம் செய்து உரிய விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதிகள் நியமனம் செய்யப்படாமல் காலதாமதம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம். 20 ஆண்டுகளாக சார்பு நீதிபதி நியமிக்கப்படாமல் உள்ளனர்.

கோர்ட்டு புறக்கணிப்பு

வெளிமாநில நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசும், நீதிமன்றமும் இப்படி செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு நீதிமன்ற கட்டணத்தை குறைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளையும்(வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் (சனிக்கிழமை) கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொள்கின்றனர். அடுத்த மாதம் (மே) மதுரையில் நடைபெறும் வக்கீல்கள் மாநாட்டில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும். தலைமை நீதிபதி மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டு சரியா, தவறா என்பதை விட அந்த குற்றச்சாட்டு குறித்து தானே விசாரணை மேற்கொண்டதை ஏற்று கொள்ள முடியாது. தற்போது நியமிக்கப்பட்டுள்ள 3 பேர் கொண்ட கமிட்டியினர் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பார்த்திபன், பாலமுரளி, விஸ்வநாதன், இளம்பரிதி, திருமுருகன், மாதவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story