மத்தூர் பகுதியில் சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்தன ஆலங்கட்டி மழையால் மாங்காய்கள் அழுகும் அவலம்
மத்தூர் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் வாழை மரங்கள் சாய்ந்தன. மேலும் ஆலங்கட்டி மழை பெய்ததால் மாங்காய்கள் அழுகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே மத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் நாகம்பட்டியை சேர்ந்த விவசாயி ராமன் என்பவர் 2½ ஏக்கர் பரப்பில் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள் ஒடிந்தும், சாய்ந்தும் விழுந்தன. இதேபோல் நாகம்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த வாழை மரங்களும் குலைகளுடன் முறிந்து விழுந்தன.
கலர்பதி பகுதியில் ஏராளமான மா மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் தற்போது காய்கள் காய்த்துள்ளன. நேற்று முன்தினம் பெய்த ஆலங்கட்டி மழையால் மரங் களில் இருந்த மாங்காய்கள் மீது ஆலங்கட்டி விழுந்தது. இதனால் மாங்காய்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்தூர், போச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஒருபுறம் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
ஆனால் சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் முறிந்து விழுந்தும், ஆலங்கட்டி மழை காரணமாக மாங்காய்கள் அழுகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சூறைக்காற்றுக்கு சாய்ந்த வாழை மரங்களை வருவாய்த்துறை மூலம் கணக்கெடுத்து அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story