சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர், கொலை செய்யப்பட்டது அம்பலம்; போலீஸ் விசாரணை தீவிரம்


சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர், கொலை செய்யப்பட்டது அம்பலம்; போலீஸ் விசாரணை தீவிரம்
x
தினத்தந்தி 25 April 2019 4:45 AM IST (Updated: 25 April 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் சாக்கடை கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர் குறித்த விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது அம்பலமானது. அவரை கொலை செய்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை வைத்திக்குப்பம் பாப்பம்மாள் கோவில் தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த 22-ந்தேதி வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அதுபற்றி அறிந்ததும் முத்தியால்பேட்டை போலீசார் விரைந்து சென்று வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள்.

அந்த வாலிபர் அதிக அளவு மதுகுடித்து குடிபோதையில் சாக்கடை கால்வாயில் விழுந்து இறந்து இருக்கலாம் என்று முதலில் போலீசார் கருதினர். அது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் பிணமாக கிடந்தவர் புதுவையை அடுத்த தமிழக பகுதியான குயிலாப்பாளையம் குளத்து தெருவை சேர்ந்த ராமதாஸ் மகன் பரத் (வயது 25) என்பது தெரியவந்தது. கொத்தனாரான இவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் அம்பலமானது.

அதைத்தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தினர்.

இதில் சம்பவத்தன்று சினிமா பார்க்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பரத் புதுவை வந்துள்ளார். இங்கு கருவடிக்குப்பத்தில் உள்ள சாராயக்கடைக்கு சென்று சிலருடன் சேர்ந்து சாராயம் குடித்ததாக தெரிகிறது.

வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த அந்த நபர்களுடன் பாப்பம்மாள் கோவில் தெருவுக்கு வந்த இடத்தில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டிருக்கலாம். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் பரத்தை அடித்துக் கொலை செய்துவிட்டு பிணத்தை சாக்கடை கால்வாயில் போட்டுவிட்டு சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

இந்த கொலையில் தொடர்பு உள்ளதாக வாலிபர்கள் சிலரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் துருவி துருவி விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

Next Story