மணக்குடியில் பயங்கரம் மீனவர் வெட்டிக்கொலை சாதாரண பிரச்சினை கொலையில் முடிந்தது


மணக்குடியில் பயங்கரம் மீனவர் வெட்டிக்கொலை சாதாரண பிரச்சினை கொலையில் முடிந்தது
x
தினத்தந்தி 25 April 2019 4:45 AM IST (Updated: 25 April 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

மணக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சாதாரண பிரச்சினை கொலையில் முடிந்ததாக போலீசார் கூறினர்.

மேலகிருஷ்ணன்புதூர்,

மணக்குடி லூர்து மாதா தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 35), மீன்பிடி தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து தஸ்நேவிஸ் மேரி சஜினி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். தற்போது கோடை காலம் என்பதால் வின்சென்ட் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள குருசடி முன்பு தூங்குவது வழக்கம். அதே பகுதியை மேலும் சிலரும் அங்கு தூங்குவார்கள்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வின்சென்ட் தனது மனைவி, குழந்தைகளுடன் குருசடி முன்பு தூங்குவதற்காக படுத்திருந்தார். நள்ளிரவு நேரத்தில் ‘டார்ச்லைட்‘ வெளிச்சம் முகத்தில் பட்டதால் திடுக்கிட்டு வின்சென்ட் எழுந்து பார்த்தார். அங்கு அதே பகுதியை சேர்ந்த கிதியோன் என்ற மீனவர் கையில் டார்ச்லைட்டுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் வின்சென்ட், பெண்கள் தூங்கும் பகுதியில் ‘டார்ச்லைட்‘ ஏன் அடித்தாய் என்று தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கிதியோனுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த ஜஸ்டின், லாடஸ், அவருடைய மகன்கள் அகில், நிகில், ஆன்டணி, அஸ்வின் ஆகியோரும் வின்சென்டிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அவர்கள் வின்சென்டை சரமாறியாக வெட்டினார்கள். வின்சென்ட் அபய குரல் கேட்டு அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் விழித்துக் கொண்டனர். அவர்களும் கதறி அலறினர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.

அதற்குள் அந்த கும்பல் வின்சென்டை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த வின்சென்டை மீட்டு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வின்சென்ட் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

தகவல் அறிந்த சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர்ராய், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் ஏதும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வின்சென்டின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் பிரேத பரிசோதனை முடிந்து பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது. கொலையாளிகளை கைது செய்தால் தான் வின்சென்ட் உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைதொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள், கொலையாளிகளை கைது செய்த பிறகுதான் வின்சென்டின் உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

வின்சென்ட் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது வின்சென்டுக்கும், கிதியோனுக்கும் எந்தவொரு முன்விரோதமும் இருந்தது கிடையாது. அன்றைய தினம் ‘டார்ச்லைட்‘ அடித்ததால் ஏற்பட்ட சாதாரண பிரச்சினைதான் கொலையில் முடிந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக மணக்குடியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story