வாக்கு மையத்திற்குள் நுழைந்த விவகாரம்: 4 பேரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


வாக்கு மையத்திற்குள் நுழைந்த விவகாரம்: 4 பேரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 April 2019 3:30 AM IST (Updated: 25 April 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

வாக்கு மையத்திற்குள் நுழைந்த விவகாரத்தில் 4 பேரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை,

மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்ததாக பெண் அதிகாரி சம்பூரணம் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அரசு அலுவலர்கள் சங்கம் சார்பில் அரசு ஊழியர்கள், கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது 4 பேரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து அவர்கள் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து அரசு ஊழியர்கள் சிலர் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தலின் போது சட்ட விதிமீறல்களும், கலவரங்களும் நடக்கும். ஏராளமான வழக்குகளும் பதிவு செய்யப்படும். ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தல் மிக அமைதியாக நடந்து முடிந்து உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அரசு ஊழியர்களும், போலீசாரும் தான். மேலும் தேரோட்டம்-கள்ளழகர் எதிர்சேவை தினத்தன்று தேர்தல் நடந்தாலும், அரசு ஊழியர்கள் இரவு-பகல் பாராமல் பணியாற்றி ஜனநாயக பணியினை சிறப்பாக செய்தனர்.

ஆனால் தேர்தல் முடிந்த நிலையில் ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிதாக்கி தேர்தல் பணியில் ஈடுபட்ட 4 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச்சாவடியில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்படும் படிவம்-17சி உள்பட சில ஆவணங்கள் நகல் எடுப்பது வழக்கம். ஆனால் அன்றைய தினம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சில வாக்குச்சாவடிகளின் ‘படிவம்-17சி’யை நகல் எடுக்கப்படவில்லை. இந்த நகல் இருந்தால் தான் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எவ்வளவு வாக்குகள் பதிவானது என்பதனை தேர்தல் அலுவலர்கள் துல்லியமாக கணக்கெடுக்க முடியும்.

எனவே தான் பெண் அதிகாரி சம்பூரணம் உள்பட 4 பேரும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சென்று ‘படிவம்-17சி’யை நகல் எடுத்துள்ளனர். இந்த படிவம்-17சி ஏற்கனவே அந்த வாக்குச்சாவடியில் உள்ள பூத் ஏஜெண்டுகளிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்த படிவம்-17சி மூலம் எந்த முறைகேடும் செய்ய முடியாது. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் கட்சிகளின் அழுத்தம் காரணமாக தவறாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story