புளியந்தோப்பில் வியாபாரியை மிரட்டி மாமூல் கேட்ட வாலிபர் கைது போலீஸ் நிலையம் முன்பு மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


புளியந்தோப்பில் வியாபாரியை மிரட்டி மாமூல் கேட்ட வாலிபர் கைது போலீஸ் நிலையம் முன்பு மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 April 2019 10:30 PM GMT (Updated: 24 April 2019 8:52 PM GMT)

புளியந்தோப்பில் வியாபாரியை மிரட்டி மாமூல் கேட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு நரசிம்மர் நகர், 5-வது தெருவை சேர்ந்தவர் எழிலரசன் (வயது 26). கடந்த ஆண்டு ஜூன் மாதம் புளியந்தோப்பு திரு. வி.க. தெருவில் ராதா என்ற ராதாகிருஷ்ணன் (63) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான எழிலரசன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், ஏற்கனவே 3 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் புளியந்தோப்பு திரு.வி.க தெருவை சேர்ந்த வியாபாரி ஒருவரை மிரட்டி மாமூல் கேட்டதாக எழிலரசன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேற்று எழிலரசனை விசாரணைக்காக போலீஸ்நிலையம் அழைத்து வந்தனர்.

தீக்குளிக்க முயற்சி

தகவல் அறிந்த எழிலரசனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், வழக்கறிஞர்கள் நேற்று காலை புளியந்தோப்பு போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். போலீசார் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி எழிலரசனை அழைத்து வந்ததாக கூறி போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென எழிலரசனின் மனைவி காயத்ரி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கைது

உடனே உதவி கமிஷனர் விஜய் ஆனந்த், இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அதிகாரிகள், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதற்கிடையே எழிலரசன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story