மண்ணடியில் விடுதியில் தங்கி இருந்த வைர வியாபாரியை தாக்கி ரூ.2 லட்சம் வைடூரிய கற்கள் கொள்ளை
மண்ணடியில் விடுதியில் தங்கி இருந்த வைர வியாபாரியை தாக்கி ரூ. 2லட்சம் மதிப்புள்ள வைடூரிய கற்கள், பணம், செல்போனை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பிராட்வே,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் சீனிவாசலு (வயது 36). வைர வியாபாரி. இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு முகநூல் மூலம் சென்னையை சேர்ந்த யோகேஷ் என்பவர் பழக்கம் ஆனார். அப்போது யோகேஷ், தனக்கு வைடூரிய கற்கள் தேவைப்படுவதாக தெரிவித்தார்.
இதையடுத்து சீனிவாசலு, வைடூரிய கற்களுடன் தனது நண்பரான முகேஷ் மற்றும் அவரது குடும்பத்துடன் சென்னை வந்தார். பின்னர் மண்ணடி மூர்தெருவில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
சீனிவாசலு ஒரு அறையிலும், முகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றொரு அறை யிலும் தங்கி இருந்தனர்.
வைடூரிய கற்கள் கொள்ளை
பின்னர் சீனிவாசலு, யோகேசை செல்போனில் தொடர்புகொண்டு தான் வைடூரிய கற்களுடன் சென்னை வந்து விடுதியில் தங்கி இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து யோகேஷ் தனது கூட்டாளிகள் 3 பேருடன் விடுதிக்கு வந்தார்.
அவர், வைர வியாபாரி சீனிவாசலுவை மிரட்டி, கையால் தாக்கி ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்து 500 மதிப்புள்ள வைடூரிய கற்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி சீனிவாசலு கொடுத்த புகாரின்பேரில் வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் விடுதிக்குள் 3 நபர்கள் வந்து செல்வதும், வெளியில் மோட்டார்சைக்கிளில் ஒருவர் இருப்பதும் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story