கொடைக்கானலில், ஐகோர்ட்டு உத்தரவை மீறி மேலும் ஒரு தங்கும் விடுதி திறப்பு - மீண்டும் ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை
கொடைக்கானலில், ஐகோர்ட்டு உத்தரவை மீறி மேலும் ஒரு தங்கும் விடுதி திறக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் தங்கும் விடுதிக்கு ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகரில் உரிய அனுமதி இன்றியும் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் கட்டப்பட்டுள்ள சுமார் 286 கட்டிடங்களுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் நகராட்சி அதிகாரிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ‘சீல்’ வைத்தனர். இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் ‘சீல்’ வைக் கப்பட்ட பல தங்கும் விடுதிகளை உரிமையாளர்கள் மீண்டும் திறந்து அறைகள் வாடகைக்கு விடப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு காமராஜர் சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று சீனிவாசபுரம் பகுதியில் ‘சீல்’ வைக்கப்பட்ட 28 அறைகள் கொண்ட தங்கும் விடுதி மீண்டும் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் உத்தரவின்பேரில் நகரமைப்பு அதிகாரிகள் பெரியசாமி, முருகானந்தம், நகரமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சீனிவாசபுரம் பகுதியில் சோதனை செய்தனர்.
அதில் ‘சீல்’ வைக்கப்பட்ட அறைகள் திறக்கப்பட்டு மீண்டும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த தங்கும் விடுதியை அதிகாரிகள் மீண்டும் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து எம்.எம். தெரு பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 3 தங்கும் விடுதிகளையும் நகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்ததுடன் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பையும் துண்டித்தனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் முருகேசன் கூறுகையில்,‘மதுரை ஐகோர்ட்டு உத்தரவுபடி ‘சீல்’ வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளை உரிமையாளர்கள் சீலினை அகற்றிவிட்டு சுற்றுலா பயணிகளுக்கு அறைகளை வாடகைக்கு கொடுத்து வருகின்றனர். இது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க நகரமைப்பு அலுவலர் பெரியசாமி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு நகரில் உள்ள ‘சீல்’ வைக்கப்பட்ட அனைத்து தங்கும் விடுதிகளும் ஆய்வு செய்யப்பட உள்ளது என்றார்.
இந்தசம்பவத்தால் கொடைக் கானலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story