மாவட்ட செய்திகள்

தியாகதுருகத்தில், கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு + "||" + In thiyakaturukathil, Kallak love couple suicide

தியாகதுருகத்தில், கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு

தியாகதுருகத்தில், கள்ளக்காதல் ஜோடி தற்கொலை - உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு
உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது.
கண்டாச்சிமங்கலம்,

சேலம் மாவட்டம் ரெட்டியூர் பெருமாள் கவுண்டர் காலனியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் கோபிநாத் (வயது 31). இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி(33) என்பவருடன் கடந்த 19-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்துக்கு வந்தார். அப்போது தாங்கள் கணவன்-மனைவி என கூறிக்கொண்டு அவர்கள் அண்ணாநகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினர்.

நேற்று முன்தினம் மாலை கோபிநாத், ராஜேஸ்வரி ஆகியோர் அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினர். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் அருகில் வசித்தவர்கள் கோபிநாத் தங்கியிருந்த வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் கோபிநாத், ராஜேஸ்வரி ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு 2 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அந்த வீட்டின் உரிமையாளரிடம் கோபிநாத் கொடுத்திருந்த முகவரியை வைத்து சேலம் மாவட்ட போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் கோபிநாத்தை காணவில்லை என அவரது மனைவி உமாவும், ராஜேஸ்வரியை காணவில்லை என அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் அவரது கணவர் முல்லைவேந்தனும் புகார் கொடுத்திருந்தது தெரியவந்தது. அதன் பிறகு தான் தற்கொலை செய்து கொண்டது கள்ளக்காதல் ஜோடி என்பது போலீசாருக்கு தெரிந்தது.

தச்சுத்தொழில் செய்து வந்த கோபிநாத் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அன்னகாரபட்டியில் உள்ள முல்லைவேந்தன் வீட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது ராஜேஸ்வரிக்கும் கோபிநாத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த முல்லைவேந்தன் ராஜேஸ்வரியை கண்டித்துள்ளார்.

இதனால் ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு ரெட்டியூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பிறகு கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் பற்றி அறிந்த கோபிநாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வெளியூருக்கு சென்று குடும்பம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 19-ந் தேதி இருவரும் தியாகதுருகத்துக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் உறவினர்களின் ஆதரவு இல்லாததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, நேற்று முன்தினம் இரவு விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்த போது கோபிநாத் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் நானும், ராஜேஸ்வரியும் சேர்ந்து வாழ்வது எனது தாய்க்கும், உறவினர்களுக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டிருந்தது. கள்ளக் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.