திருச்சியில் 125 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உரிமையாளர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூல்


திருச்சியில் 125 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உரிமையாளர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 24 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-25T02:47:10+05:30)

திருச்சியில் 125 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உரிமையாளர்களிடம் ரூ.1½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

திருச்சி,

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தடையை மீறி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் குணசேகரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் டேவிட் மற்றும் அதிகாரிகள் நேற்று பகல் மாநகராட்சி 16, 17, 18 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பெரிய கம்மாளத்தெரு, மட்டக்காரத்தெரு, குஜிலிதெரு, பெரியகடைவீதி ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 25 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கடைகளின் உரிமையாளர்களிடம் அபராதமாக ரூ.45 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

அபராதம் வசூல்

இதேபோல் மேலராணித்தெருவில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டை குடோனாக மாற்றி 100 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குடோன் உரிமையாளரிடம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு, அபராத தொகை வசூல் செய்யப்பட்டது. திருச்சியில் நேற்று ஒரேநாளில் நடத்திய அதிரடி சோதனையில் 125 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story