நேற்று நண்பகல் 12.07 மணிக்கு சென்னையில் ‘நிழல் விழா நேரம்’ அதிசய நிகழ்வு
சென்னையில் நேற்று நண்பகல் 12.07 மணிக்கு நிலவிய ‘நிழல் விழா நேரம்’ அதிசயத்தை மக்கள் ரசித்து மகிழ்ந்தனர்.
சென்னை,
சூரியனை பூமி சுற்றி வரும் தளத்தில் அதன் சுழல் அச்சு 23 டிகிரி சாய்ந்து இருக்கிறது. ஆனால் டிசம்பர் மாதம் 22-ந்தேதி, 22 டிகிரி தென் திசையில் பூமியின் சுழல் அச்சு இருக்கும். பின்னர் சூரியன் வடக்கு திசை நோக்கி நகர்ந்து மார்ச் 21-ந்தேதி பூமத்தியரேகை பகுதியில் காணப்படும். அன்றைய தினம், சம இரவு-பகல் நாள் என்று அழைக்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து கடகரேகை நோக்கி சூரியன் நகரும்போது ஏப்ரல் 24-ந்தேதி, நிலநடுக்கோட்டில் இருந்து 13 டிகிரி வடக்கு அட்சரேகையில் இருக்கும். இந்த அட்சரேகையில்தான் சென்னை, பெங்களூரு, மங்களூரு போன்ற நகரங்கள் இருக்கின்றன. அந்த நாளின் நண்பகல் நேரத்தில் தலை உச்சிக்கு நேராக சூரியன் வரும். அப்போது நம்முடைய நிழல் நம் காலுக்கு கீழேயே செங்குத்தாக விழும்.
இதனை வானியல் ஆய்வாளர்கள் ‘பூஜ்ஜிய நிழல் நாள்’ என்றும், அந்த குறிப்பிட்ட நேரத்தை ‘நிழல் விழா நேரம்’ என்றும் அழைக்கிறார்கள். இந்த பூஜ்ஜிய நிழல் நாள் நிகழ்வு ஏப்ரல் மாதம் 24-ந்தேதியும், ஆகஸ்டு மாதம் 18-ந்தேதியும் என ஒவ்வொரு ஆண்டும் 2 முறை தோன்றுகிறது.
12.07 மணிக்கு தெரிந்தது
அந்தவகையில் நேற்று (24-ந்தேதி) சென்னையில் பூஜ்ஜிய நிழல் நாள் நிகழ்வு தெரிந்தது. சரியாக நண்பகல் 12.07 மணிக்கு சூரியன் உச்சியில் தோன்றியபோது, மனிதர்கள், உயிரினங்கள் மற்றும் எந்த ஒரு பொருளின் நிழலும் செங்குத்தாக விழுந்ததால், தெரியவில்லை. இந்த நிகழ்வு அதிகபட்சமாக 2 நிமிடம் வரை நீடித்தது. இதை சென்னைவாசிகள் ரசித்து மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்வை பார்ப்பதற்காக சென்னை கோட்டூர்புரம் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் வந்து பார்த்தனர். சென்னையில் நண்பகல் 12.07 மணிக்கு நிகழ்ந்த இந்த நிழல் விழா நேர நிகழ்வு, பெங்களூருவில் 12.17 மணிக்கும், மங்களூருவில் 12.27 மணிக்கும் தெரிந்து இருக்கிறது.
சுழல்வேகம் கணக்கிட முடியும்
இதுகுறித்து பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் (பொறுப்பு) எஸ்.சவுந்தரராஜ பெருமாள் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த நிகழ்வின் மூலம் நாம் பூமியின் சுழல் வேகம், அட்சரேகை, தீர்க்கரேகை ஆகியவற்றை கணக்கிட முடியும். அதேபோல், இங்கு பூஜ்ஜிய நிழல் வரும்போது, அலகாபாத்தில் நீண்ட நிழல் விழும். இதை கணக்கிட்டு பூமியின் சுற்றளவை நாம் தெரிந்து கொள்ளலாம்’ என்றார்.
Related Tags :
Next Story