திருப்பூரில் பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு - உரிமம் பெறாத வியாபாரிகளுக்கு எச்சரிக்கை


திருப்பூரில் பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு - உரிமம் பெறாத வியாபாரிகளுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 April 2019 3:45 AM IST (Updated: 25 April 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் உள்ள பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது உரிமம் பெறாத வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணி மற்றும் எட்டிக்கல் ஆகியோர் திருப்பூர் மார்க்கெட் பகுதியில் உள்ள பழகுடோன்கள், மொத்தம் மற்றும் சில்லரை பழ விற்பனை கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது கார்பைடு கற்கள் மற்றும் ரசாயனங்களை பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றனவா? என்று பழங்கள் வைத்துள்ள பெட்டிகள் மற்றும் குவித்து வைக்கப்பட்டிருந்த பழங்களை எடுத்து பார்த்து சோதனை செய்தனர். மேலும் மொத்த விற்பனை கடைகளிலும் அந்த ஆய்வை நடத்தினார்கள். சில்லரை பழ கடைகளில் உரிமம் பெறாதவர்களிடம் விரைந்து உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வு குறித்து மாவட்ட நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை கூறியதாவது:-

திருப்பூர் பழைய பஸ்நிலையம், மார்க்கெட், கே.எஸ்.சி. பள்ளி வீதி போன்ற இடங்களில் உள்ள பழ குடோன்கள் மற்றும் பழ கடைகள் என்று மொத்தம் 14 இடங்களில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் கார்பைடு கல் மற்றும் ரசாயனம் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைப்பது கண்டறியப்படவில்லை. ஆனால் அழுகிய நிலையில் இருந்த 125 கிலோ பலாப்பழம் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாமல் வியாபாரம் செய்பவர்கள் உடனடியாக உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வியாபாரிகளுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்த பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் உபாதைகள் குறித்தும் அவர்களிடம் விளக்கப்பட்டது. கார்பைடு கல் கொண்டு பழுக்க வைத்த பழங்களை விற்பனை செய்ய கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story