பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு


பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 25 April 2019 4:30 AM IST (Updated: 25 April 2019 3:43 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் ஓடும் பள்ளிக்கூட வேனில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் வேகத்தை குறைத்ததால் வேன் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றது. அதில் இருந்த 21 மாணவர்களை காப்பாற்றிவிட்டு அவர் உயிர் நீத்தார்.

ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர்-புன்னக்காயல் ரோடு பகுதியில் வசித்தவர் மோகன்ராஜ் (வயது 45). இவர் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று காலையில் இவர் வழக்கம்போல் ஆத்தூரில் இருந்து பள்ளிக்கூட வேனில் மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு, பள்ளிக்கூடத்துக்கு சென்று கொண்டிருந்தார். அந்த வேனில் 21 மாணவ-மாணவிகள் மற்றும் 2 ஆசிரியைகள் இருந்தனர்.

ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜாரைக் கடந்து காமராஜபுரம் பகுதியில் சென்றபோது, திடீரென்று மோகன்ராஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் வேனின் வேகத்தை குறைத்தவாறு, இடது பக்கமாக வேனை திருப்பிய நிலையில், ஸ்டீயரிங் மீது மயங்கி விழுந்தார். அப்போது சாலையின் இடதுபுறமாக இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது வேன் மோதி நின்றது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. வேனில் இருந்த மாணவ-மாணவிகள், ஆசிரியைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வேனில் மயங்கிய நிலையில் கிடந்த மோகன்ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சுற்றுச்சுவர் மீது மோதியதில் பள்ளிக்கூட வேனில் இருந்த 6 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மாரடைப்பில் உயிரிழந்த மோகன்ராஜின் உடலை ஆறுமுகநேரி போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மோகன்ராஜிக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, சிரமத்துடன் மாணவ-மாணவிகளின் உயிரை காப்பாற்ற போராடியுள்ளார். உயிருக்கு போராடிய நிலையிலும் வேனின் வேகத்தை குறைத்து இடது பக்கமாக திருப்பியதால், எதிரே வந்த வாகனங்களின் மீது வேன் மோதி விபத்துக்கு உள்ளாவதை தவிர்த்தார். தொடர்ந்து சாலையின் ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்ம் மீதும் வேனை மோதவிடாமல் போராடி இருக்கிறார். அவர் சுயநினைவு இழந்த நிலையில் வேன் சாலையோரத்தில் இருந்த வீட்டின் சுற்றுச்சுவரில் மோதி நின்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தன்னுடைய உயிர் பிரியும் தருவாயிலும் வேனில் இருந்த மாணவ-மாணவிகளின் உயிரை காப்பாற்ற போராடிய டிரைவரை பொதுமக்கள் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தனர்.

இறந்த வேன் டிரைவர் மோகன்ராஜூக்கு சொந்த ஊர் ஆத்தூர் அருகே உள்ள செல்வன்புதியனூர் ஆகும். இவருக்கு சுப்புலட்சுமி (35) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story