குடகில் சூறைக்காற்றுடன் பலத்த மழை, 10 வீடுகள் சேதம் - சிக்கமகளூருவில் ஆலங்கட்டி மழை பெய்தது
குடகில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். சிக்கமகளூருவில் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குடகு,
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குடகு மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு எப்போதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவும். ஆனால், கடந்த சில மாதங்களாக குடகில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த நிலையில், குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள், நிம்மதி அடைந்துள்ளனர்.
தற்போது கடந்த 3 நாட்களாக குடகில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அத்துடன் சூறைக்காற்றும் வீசுவதால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் குடகு மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புராவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பிரஜிதா என்ற பெண் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விராஜ்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
மேலும் குசால்நகர் அருகே கும்மனகொல்லி பகுதியில் உள்ள அரசு பள்ளியின் மேற்கூரை சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பறந்தது. இதேபோல குசால்நகர் அருகே ஹாரங்கி அணைப்பகுதியில் உள்ள சில வீடுகளும் சேதமடைந்தன. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் ஏராளமான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பல கிராமங்களில் 2 நாட்களாக மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தக்க நிவாரணம் வழங்குவதாகவும், படுகாயமடைந்த பெண்ணின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்தனர்.
குடகு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு (2018) ஆகஸ்டு மாதம் குடகில் பெய்த மழையால் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, சிக்கமகளூரு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் சிக்கமகளூரு, கொப்பா, சிருங்கேரி, என்.ஆர்.புரா உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. மேலும் சூறைக்காற்றுக்கு ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலை நடுவே விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
என்.ஆர்.புரா தாலுகா பாலேஒன்னூர் அருகே படுப்புகெரே கிராமத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்போது 15 கிலோ எடை கொண்ட ஆலங்கட்டி ஒன்று அந்தப்பகுதியை சேர்ந்த நவீன் என்பவரின் தோட்டத்தில் விழுந்தது. ஆலங்கட்டி மழை பெய்ததால் அந்தப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் ஐஸ்கட்டிகளை கையில் எடுத்து விளையாடினர்.
சிக்கமகளூருவில் கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள், தற்போது பெய்து வந்த மழையால் நிம்மதி அடைந்தனர். விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story