கங்கைகொண்டானில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட புல்லை மேய்ந்த மான், ஆடுகள் சாவு கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு


கங்கைகொண்டானில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட புல்லை மேய்ந்த மான், ஆடுகள் சாவு கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 25 April 2019 3:45 AM IST (Updated: 25 April 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

கங்கைகொண்டானில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட புல்லை மேய்ந்த 4 மான்கள், 6 ஆடுகள் இறந்தன. இதுதொடர்பாக கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கயத்தாறு,

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் வனப்பகுதியில் புள்ளி மான்கள் சரணாலயம் உள்ளது. இங்கு ஏராளமான புள்ளி மான்கள், மிளா உள்ளிட்ட அரியவகை வன விலங்குகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் தொடங்கியதால், வனப்பகுதியில் போதிய புற்கள், தண்ணீர் கிடைக்காததால், அவற்றைத் தேடி வன விலங்குகள், அருகில் உள்ள விளைநிலங்களுக்கு செல்வது வழக்கம்.

கங்கைகொண்டான் சிற்றாற்றின் கரையோரங்களில் சிலர் ஆக்கிரமித்து, பயிரிட்டு உள்ளனர். அவற்றை ஆடு, மாடு போன்ற கால்நடைகள் மேய்ந்து செல்வதால், கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

இந்த நிலையில் கங்கைகொண்டான் பொங்கலூரை சேர்ந்த அந்தோணி வர்கீஸ் என்பவர் சிற்றாற்றின் கரையில் பூஞ்செடிகள், சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டு இருந்தார். இதற்காக பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. அப்போது அதன் அருகில் உள்ள புற்களிலும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த மிக்கேல் என்பவருக்கு சொந்தமான 6 ஆடுகள், அந்தோணி வர்கீசின் நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்ட புற்களை மேய்ந்தன. இதில் அந்த 6 ஆடுகளும் உயிரிழந்தன. இதேபோன்று வனப்பகுதியில் இருந்து இரை தேடி வந்த 4 புள்ளி மான்களும் அந்த புற்களை மேய்ந்ததில் இறந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், வனத்துறை அலுவலர் அய்யப்பன் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று, இறந்த மான்கள், ஆடுகளின் உடல்களைக் கைப்பற்றி பரிசோதனைக்காக கங்கைகொண்டான் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் மிக்கேல் அளித்த புகாரில், தனது ஆடுகளுக்கு அந்தோணி வர்கீஸ், அவருடைய மனைவி இந்திராணி ஆகியோர் விஷம் வைத்து சாகடித்ததாக புகார் மனு வழங்கினார். அதன்பேரில், அந்த 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோன்று அந்தோணி வர்கீசின் மாமனாரும், தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளருமான அருள்மணி (50) கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், தன்னை மிக்கேல், அவருடைய உறவினரான செல்வா ஆகிய 2 பேரும் தாக்கியதாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில், மிக்கேல், செல்வா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story