ஓட்டப்பிடாரம் தொகுதியில் கண் பார்வையற்றவர் உள்பட 2 பேர் வேட்புமனு தாக்கல்
ஓட்டப்பிடாரம் தொகுதியில் நேற்று கண் பார்வையற்றவர் உள்பட 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
முதல் 2 நாட்கள் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. 3-வது நாளான நேற்று மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அனைத்து மக்கள் புரட்சி கட்சியின் மாநில பொருளாளரான விருதாசலம் வடக்கு வெள்ளூரை சேர்ந்த கலைச்செல்வத்தின் மகன் உதயசெல்வம் (வயது 30) என்பவர் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் கண்பார்வை இல்லாதவர். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், லட்சியா என்ற மகளும் உள்ளனர்.
இதுகுறித்து உதயசெல்வம் கூறும்போது, ‘4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அனைத்து மக்கள் புரட்சி கட்சி சார்பில் தமிழ்நாட்டில் முதல் முறையாக கண் பார்வையற்றவர்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். தூத்துக்குடியில் அனைத்து மக்களுக்கும் குடிநீர் பிரச்சினை உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்பட்டு, விவசாயம் பெருக வேண்டும், மக்களின் வாழ்வாதாரம் பெருக உறுதுணையாக இருப்பேன்’ என்று கூறினார்.
இவர் தவிர சுயேச்சை வேட்பாளராக நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த ராகவன் என்பவரும் மனு தாக்கல் செய்து உள்ளார். வேட்பு மனுதாக்கலையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story