தேர்தலில் பயன்படுத்தப்படாத 2,138 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருவள்ளூர் கொண்டு செல்லப்பட்டன நெல்லையில் இருந்து லாரிகளில் அனுப்பி வைப்பு


தேர்தலில் பயன்படுத்தப்படாத 2,138 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திருவள்ளூர் கொண்டு செல்லப்பட்டன நெல்லையில் இருந்து லாரிகளில் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 25 April 2019 4:45 AM IST (Updated: 25 April 2019 4:51 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலில் பயன்படுத்தப்படாத 2,138 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நெல்லையில் இருந்து லாரிகள் மூலம் திருவள்ளூர் கொண்டு செல்லப்பட்டன.

நெல்லை, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந்தது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராதாபுரம், நாங்குநேரி ஆகிய 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நெல்லை, தென்காசி (தனி) என 2 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன.

10 சட்டசபை தொகுதிகளிலும் 2 ஆயிரத்து 982 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நெல்லையை அடுத்த ராமையன்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தன.

முதல்கட்டமாக 3 ஆயிரத்து 579 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 3 ஆயிரத்து 579 கட்டுப்பாட்டு கருவிகளும், யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை சரிபார்ப்பதற்கான 4 ஆயிரத்து 146 எந்திரங்களும் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நெல்லை தொகுதியில் 26 வேட்பாளர்களும், தென்காசி தொகுதியில் 25 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இதனால் கூடுதலாக 3 ஆயிரத்து 579 வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டுகள் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியிலும், தென்காசி தொகுதியில் ஓட்டுகள் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் குற்றாலம் பராசக்தி கல்லூரியிலும் வைக்கப்பட்டு உள்ளன.

தேர்தலுக்கு பயன்படுத்தப்படாத 2,138 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராமையன்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை என்ஜினீயர்கள் அடங்கிய குழுவினர் நேற்று காலை சரிபார்த்தனர். பழுதான எந்திரங்கள் தனியாகவும், நல்ல முறையில் இயங்கக்கூடிய எந்திரங்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டது. கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்து ‘சீல்‘ வைக்கப்பட்டன. பின்னர் அந்த எந்திரங்களின் எண்ணிக்கை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது.

பகல் 2 மணிக்கு மேல் அந்த எந்திரங்கள் திருவள்ளூரில் உள்ள மத்திய, மாநில தேர்தல் ஆணைய கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. லாரிகளில் எந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. இந்த பணி இரவு வரை நீடித்தது.

Next Story