குடியாத்தம் அருகே காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது விஷம் குடித்த காதலிக்கு தீவிர சிகிச்சை
குடியாத்தம் அருகே காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ள மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் காதலி விஷம் குடித்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடியாத்தம்,
குடியாத்தம் அருகே ஐதர்புரம் கிராமத்தை சேர்ந்த விவசாயியின் 19 வயது மகள் குடியாத்தத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 26). சென்னையில் தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
நவீன்குமாரும் கல்லூரி மாணவியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கல்லூரி மாணவி நவீன்குமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நவீன்குமார் கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்ள மறுத்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி மாணவி குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நவீன்குமாரை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று மாலை காதலன் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லையே என்ற மனவருத்தத்தில் இருந்த கல்லூரி மாணவி போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே சென்று விஷம் குடித்துள்ளார். இதனைக்கண்ட மாணவியின் உறவினர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி, கொலை மிரட்டல் விடுத்ததாக நவீன்குமாரை கைது செய்தார். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story