வாணாபுரம் அருகே 4 நாட்களாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி குடிநீருக்காக பரிதவிப்பு


வாணாபுரம் அருகே 4 நாட்களாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதி குடிநீருக்காக பரிதவிப்பு
x
தினத்தந்தி 26 April 2019 4:00 AM IST (Updated: 26 April 2019 12:10 AM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் அருகே 4 நாட்களாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீருக்காகவும் பரிதவித்து வருகின்றனர்.

வாணாபுரம்,

வாணாபுரம் அருகே உள்ள தச்சம்பட்டு, தலையாம்பள்ளம், நவம்பட்டு, பழையனூர், வேலையாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வெகுதூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த சூறாவளி காற்றினால் மின்கம்பங்கள் சாய்ந்தது. மேலும் டிரான்ஸ்பார்மர் பழுதானது. நாங்கள் இந்த பகுதி மின்சார துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், அதனை சீரமைக்கவில்லை. மேலும் குடிநீருக்காக வெகு தூரம் சென்று வருகிறோம். இந்த பகுதியில் இருக்க கூடிய விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரக்கூடிய சூழலில் தற்போது இருந்து வருகிறோம் என்றனர்.

பழையனூர் பகுதியில் தண்ணீர் இல்லை என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்கள் மின்சாரம் இல்லை என்றும் அதனால் எங்களால் குடிநீர் வழங்க முடியாது என்றும் கூறி வருகின்றனர். அதனால் அப்பகுதி பொதுமக்கள் ஜெனரேட்டர் கொண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி, பிறகு குழாய் மூலம் தண்ணீர் எடுத்து செல்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமான மின்கம்பங்களை சீரமைப்பது மட்டுமல்லாமல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story