இளநிலை உதவியாளர் தேர்வை உடனடியாக நடத்தக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


இளநிலை உதவியாளர் தேர்வை உடனடியாக நடத்தக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2019 4:30 AM IST (Updated: 26 April 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

இளநிலை உதவியாளர் தேர்வை உடனடியாக நடத்தக்கோரி திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பாப்பையன் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் லெனின் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் கலந்து கொண்டு பேசினார்.

ஐகோர்ட்டு உத்தரவின்படி இளநிலை உதவியாளர் தேர்வை காலதாமதமின்றி உடனடியாக நடத்த வேண்டும். விண்ணப்பித்தவர்களின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள், தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு மையம் குறித்து அறிவிப்புகளை வெளியிட வேண்டும். தேர்ச்சி, மதிப்பெண் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். பொது பணியிட மாறுதல் அறிவிப்பை வெளியிட வேண்டும். கடைகளின் விற்பனை அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும்.

பணியிட மாறுதலுக்கு ஊழியர்களின் பணி மூப்பை அடிப்படையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் மாலதி, மாவட்ட பொருளாளர் பாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் பழனிவேல், சுமை பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், ஓ.என்.ஜி.சி. ஊழியர் சங்க நிர்வாகி வேல்ரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அசோக்ராஜ் நன்றி கூறினார்.

Next Story