நாங்கூரில் கெயில் நிறுவனம் சார்பில் போலீசார் பாதுகாப்புடன் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி விவசாயிகள் அதிர்ச்சி


நாங்கூரில் கெயில் நிறுவனம் சார்பில் போலீசார் பாதுகாப்புடன் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி விவசாயிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 25 April 2019 11:00 PM GMT (Updated: 25 April 2019 6:56 PM GMT)

நாங்கூரில் கெயில் நிறுவனம் சார்பில் போலீசார் பாதுகாப்புடன் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருவெண்காடு,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கீழசட்டநாதபுரம், நாங்கூர், ராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் கெயில் நிறுவனம் சார்பில் எந்திரங்கள் மூலம் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 13-ந் தேதி அப்பகுதி விவசாயிகள் குழாய்கள் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து குழாய்கள் பதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்த சமாதான கூட்டம் நேற்று முன்தினம் சீர்காழி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சபிதாதேவி தலைமையில் நடைபெற்றது. இதில் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த 11 விவசாயிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது அந்த விவசாயிகள், கீழசட்டநாதபுரம், நாங்கூர், ராதாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் கெயில் நிறுவனம் சார்பில் குழாய்கள் பதிப்பது குறித்து எங்களிடம் மட்டும் கருத்து கேட்கக்கூடாது சம்பந்தப்பட்ட துறையினர் அனைவரும் மேற்கண்ட கிராமங்களுக்கு நேரில் வந்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். அப்போது தான் தீர்வு கிடைக்கும் என்று கூறி கூட்டத்தை புறக்கணித்து சென்றனர். இதனால் சமாதான கூட்டம் உடன்பாடு இன்றி முடிந்தது.

இந்த நிலையில் நேற்று திருவெண்காடு அருகே நாங்கூர் பகுதியில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா, இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சுப்பிரியா மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் கெயில் நிறுவனம் விளைநிலங்களில் மீண்டும் ராட்சத குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது பணியாளர்கள் பொக்லின் உதவியுடன் குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. ராட்சத குழாய்களை விளைநிலங்களில் பதிப்பதால் பாதிப்பு ஏற்படும் என்பதை அறிந்தும் போலீசார் பாதுகாப்புடன் பணி நடைபெறுவதை கண்டு அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

ஏற்கனவே வறட்சியால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு, முப்போகம் விளைந்த இந்த பகுதியில் ஒருபோகம் விளைவிக்கவே படாதபாடு படவேண்டி உள்ளது. இங்கு கெயில் நிறுவனத்தினர் ராட்சத குழாய்களை பதிப்பதால் விளைநிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும். மேலும் நிலத்தடிநீர் மட்டம் பாதாளத்திற்கு சென்றுவிடும்.

இந்தபகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி கருத்து கேட்காமல் போலீசார் பாதுகாப்புடன் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கு கோர்ட்டில் சட்டரீதியாக வழக்கு தொடர்ந்து பணியை தடுத்து நிறுத்துவோம். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி விளை நிலங்களை மீட்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story