தஞ்சையில் சின்ன வெங்காயம் விலை உயர்வு 1 கிலோ ரூ.45-க்கு விற்பனை


தஞ்சையில் சின்ன வெங்காயம் விலை உயர்வு 1 கிலோ ரூ.45-க்கு விற்பனை
x
தினத்தந்தி 25 April 2019 10:45 PM GMT (Updated: 2019-04-26T01:12:54+05:30)

தஞ்சையில் சின்ன வெங்காயம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 1 கிலோ ரூ.45-க்கு விற்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயம் தமிழகத்தில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு பெரம்பலூர், உடுமலைப்பேட்டை போன்ற பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும். தினமும் 5 லாரிகளில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும்.

1 கிலோ ரூ.45-க்கு விற்பனை

ஆனால் தற்போது சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. மைசூரில் இருந்து சின்னவெங்காயம் வரத்து அடியோடு நின்று விட்டது. தமிழகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயம் தான் தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை உயரத்தொடங்கி விட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது 1 கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல்லாரியின் விலையும் உயர தொடங்கி இருக்கிறது. ரூ.15-க்கு விற்பனையான பல்லாரி நேற்று ரூ.20-க்கு விற்பனையானது.

வியாபாரிகள் கருத்து

இது குறித்து தஞ்சை காமராஜர் மார்க்கெட் வெங்காய வியாபாரிகள் கூறும்போது, மழை இல்லாததால் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் குறைந்துவிட்டது. தினமும் 10 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும். ஆனால் இப்போது 2 டன் தான் வருகிறது. தொடர்ந்து விலை உயர வாய்ப்பு உள்ளது. தற்போதைக்கு விலை குறைய வாய்ப்பு இல்லை என்றனர்.

சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வாங்க வந்த பெண்கள், விலை உயர்ந்துள்ளதை கேட்டவுடன் 1 கிலோ வாங்க நினைத்தவர்கள் கூட ¼ கிலோ, ½ கிலோ என சின்ன வெங்காயத்தை குறைந்த அளவு வாங்கி சென்றனர்.

காய்கறிகள் விலை

கடந்த 10 நாட்களாக காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கிலோ ரூ.35-க்கு விற்கப்பட்ட பீட்ரூட் நேற்று ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டது. பீன்ஸ் ரூ.100-க்கும், கத்தரிக்காய் ரூ.20-க்கும், உருளைக்கிழங்கு ரூ.25-க்கும், மாங்காய் ரூ.20-க்கும், சவ்சவ் ரூ.25-க்கும், பச்சை மிளகாய் ரூ.40-க்கும், இஞ்சி ரூ.120-க்கும், வெண்டைக்காய் ரூ.35-க்கும், முட்டை கோஸ் ரூ.30-க்கும், தக்காளி ரூ.40-க்கும், கேரட் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Next Story