வங்கி ஊழியரை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
வங்கி ஊழியரை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சேலம்,
சேலம் குகை மீனாட்சிபுரம் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 40). இவர் சேலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்த குப்புராஜ்(37) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி சீனிவாசன் தனது உறவினரான ரஞ்சித்குமார் உள்பட 2 பேருடன் மூங்கப்பாடி பகுதியில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது குப்புராஜ் தனது நண்பர்களான கோட்டையை சேர்ந்த தஸ்தகீர்(45), ஊமையன் என்கிற ஷாகின்ஷா ஆகியோருடன் அங்கு வந்தார்.
இதையடுத்து அவர்களுக்கும் சீனிவாசனுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குப்புராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து சீனிவாசனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்புராஜ், தஸ்தகீர், ஷாகின்ஷா ஆகியோரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் 3-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட குப்புராஜ், தஸ்தகீர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். ஷாகின்ஷா விடுதலை செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story