ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு


ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு: 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 April 2019 4:15 AM IST (Updated: 26 April 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள தேவராயபுரம் செல்லிபாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகன் வசந்தகுமார் (வயது 19), சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந் தேதி பவித்திரம் ராசப்பா என்பவரது விவசாய கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் வசந்தகுமார் மதுவில் விஷம் கலந்து கொடுத்து, கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த டிரைவர்கள் நாகராஜன் (34), சிவசங்கர் (31), விஜய் (28) மற்றும் மெக்கானிக் விஜயகுமார் (34) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நாகராஜன் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் 4 பேர் மீதும் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனசேகரன் வாதாடினார். இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நாகராஜன், சிவசங்கர், விஜய் மற்றும் விஜயகுமாருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் கோவை ஜெயிலுக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

Next Story