ஆழ்வார்திருநகரியில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு


ஆழ்வார்திருநகரியில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் சாவு
x
தினத்தந்தி 26 April 2019 3:00 AM IST (Updated: 26 April 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரியில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.

தென்திருப்பேரை,

ஏரல் செல்வநாயகபுரத்தில் வசித்தவர் ஆனந்தராஜ் (வயது 56). இவர் ஆழ்வார்திருநகரி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று மதியம் ஆழ்வார்திருநகரி ஜீயர் மடம் பகுதியில் ஏற்பட்ட மின் இணைப்பு பழுதை சரி செய்வதற்காக, அங்குள்ள மின்கம்பத்தில் ஏறினார்.

அப்போது அவர் மின்கம்பத்தின் உச்சிக்கு சென்றவுடன், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி தவறி சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆனந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆழ்வார்திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவலிங்க பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த ஆனந்தராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஆனந்தராஜிக்கு சொந்த ஊர் தென்திருப்பேரை அருகே குருகாட்டூர் ஆகும். இவரது முதல் மனைவி இறந்ததால், 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் 2-வது மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்றதால், 3-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

Next Story