கழுகுமலை, கயத்தாறில் சூறைக்காற்றுடன் மழை: 6 ஆயிரம் வாழைகள், 1,200 பப்பாளி மரங்கள் சாய்ந்தன


கழுகுமலை, கயத்தாறில் சூறைக்காற்றுடன் மழை: 6 ஆயிரம் வாழைகள், 1,200 பப்பாளி மரங்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 25 April 2019 9:45 PM GMT (Updated: 2019-04-26T01:45:46+05:30)

கழுகுமலை, கயத்தாறில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததில் 6 ஆயிரம் வாழைகள், 1,200 பப்பாளி மரங்கள் சாய்ந்தன.

கழுகுமலை,

கழுகுமலை, கயத்தாறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் கழுகுமலை அருகே கே.சுப்பிரமணியபுரத்தில் சங்கரபாண்டியனுக்கு சொந்தமான 1,800 வாழைகள் சரிந்து விழுந்தன. இதேபோன்று கரடிகுளத்தில் மணிகண்டனுக்கு சொந்தமான 1,300 வாழைகளும், பாலகிருஷ்ணனுக்கு சொந்தமான 750 வாழைகளும், சங்கிலி பாண்டியனுக்கு சொந்தமான 700 வாழைகளும் சரிந்து விழுந்தன.

சேதம் அடைந்த வாழைகளை தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜ் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதேபோன்று கயத்தாறு அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மாரியப்பனுக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்ட சுமார் 1,200 பப்பாளி மரங்கள் சூறைக்காற்றில் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன. மேலும் திருமங்கலகுறிச்சியில் சுமார் 1,500 வாழைகள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன. வடக்கு மயிலோடையில் வீசிய சூறைக்காற்றில் சில வீடுகளின் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைகள் தனியாக பெயர்ந்து விழுந்தன. அப்போது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சூறைக்காற்றில் சாய்ந்த பப்பாளி, வாழை மரங்களையும், சேதம் அடைந்த வீடுகளையும் வருவாய் ஆய்வாளர் காசிராஜன், கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story