கூடலூரில், சூறாவளி காற்றில் பாகற்காய் பந்தல்கள் சரிந்தன - விவசாயிகள் கவலை


கூடலூரில், சூறாவளி காற்றில் பாகற்காய் பந்தல்கள் சரிந்தன - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 26 April 2019 4:00 AM IST (Updated: 26 April 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் சூறாவளி காற்றில் பாகற்காய் பந்தல்கள் சரிந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மழையை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் காற்று பலமாக வீசியதால் கூடலூர் நகராட்சி, ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகள் மற்றும் புளியாம்பாரா உள்பட ஏராளமான கிராமங்களில் பயிரிட்டு இருந்த வாழைகள் முறிந்து விழுந்தன.

இதில் சுமார் 50 ஆயிரம் வாழைகள் நாசமானது. இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். தொடர்ந்து சேதம் அடைந்த வாழைகளை கணக்கெடுக்கும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் நேற்று 3-வது நாளாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் மாலை அல்லது இரவில் சூறாவளி காற்றுடன் பரவலாக மழை பெய்கிறது. பெரும்பாலும் அனைத்து வாழைகளும் சரிந்து விட்ட நிலையில், பாகற்காய் கொடி பந்தல்கள் சரிந்து விழுகின்றன. மேலும் பாகற்காய்களும் அழுக தொடங்கி உள்ளன.

இதனால் வாழை விவசாயிகளை தொடர்ந்து பாகற்காய் விவசாயிகளும் கவலை அடைந்து உள்ளனர். இதனால் பாகற்காய் தோட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதம், அதன் மதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

கூடலூர் பகுதியில் மட்டும் பல லட்சம் ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாகற்காய் விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கோடை காலத்தில் பாகற்காய் அல்லது நேந்திரன் வாழை மட்டுமே பயிரிடப்படுகிறது. இப்பயிர்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியது.

நடப்பு ஆண்டில் வழக்கத்துக்கு மாறாக வெயில் சுட்டெரித்தது. இதனால் வாழை, பாகற்காய் பயிர்களை பாதுகாப்பது மிக சவாலாக இருந்தது. ஆனால் திடீர் என மழை மற்றும் சூறாவளி காற்று வீசியதில் வாழைகள் நாசமானது. இதற்கு அடுத்ததாக பாகற்காய் கொடி பந்தல்கள் சரிந்து விழுந்து விட்டது. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வருவாய், தோட்டக்கலைத்துறையினர் சேத விவரங்களை சேகரிக்கின்றனர். ஆனால் இழப்புக்கு ஏற்ற நிதி கிடைப்பது இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே கூடலூர்- தேவர்சோலை சாலையில் மின்வாரிய அலுவலகத்தின் முன்பு கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதில் அருகிலுள்ள மரத்தின் கிளை முறிந்து கார் மீது விழுந்தது. இதில் கார் சேதம் அடைந்தது. இதேபோல் பந்தலூர் தாலுகா பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் 16 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளது. காட்டுயானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது.

இதனால் வனத்துறையினர் கண்காணிப்பில் உப்பட்டி உதவி மின்பொறியாளர் சின்னராசா தலைமையிலான ஊழியர்கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story