நெல்லை பேட்டையில் பரபரப்பு: குளத்துக்குள் பதுங்கிய 7 பேர் கும்பல் கொலை சதி திட்டத்துடன் வந்தார்களா? போலீசார் தீவிர விசாரணை


நெல்லை பேட்டையில் பரபரப்பு: குளத்துக்குள் பதுங்கிய 7 பேர் கும்பல் கொலை சதி திட்டத்துடன் வந்தார்களா? போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 26 April 2019 3:30 AM IST (Updated: 26 April 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை பேட்டையில் குளத்துக்குள் பதுங்கிய 7 பேர் கும்பலால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் கொலை சதி திட்டத்துடன் வந்தார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேட்டை,

நெல்லை பேட்டை ரெயில் நிலையம் அருகில் ஒரு குளம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு ஒரு ஆட்டோவில் 7 பேர் வந்து இறங்கினர். பேண்ட், சட்டை அணிந்து டிப்-டாப்பாக காணப்பட்ட அவர்கள் குளத்துக்குள் மது அருந்தி விட்டு அங்கேயே பதுங்கி இருந்தனர்.

நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் குளத்து பகுதிக்கு சென்றனர். அப்போது 7 பேர் அங்கு பதுங்கி இருப்பதை கண்டனர். இதுபற்றி தங்களது பகுதி மக்களிடம் கூறினர். அவர்கள் அங்கு திரண்டு வருவதை கண்ட 7 பேரும் ஆட்டோவில் ஏறி தப்பி சென்று விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஏதேனும் முக்கிய பிரமுகரை தீர்த்து கட்ட சதிதிட்டத்துடன் அந்த கும்பல் பதுங்கி இருக்கலாம் என்று தெரியவந்தது. அதாவது அந்த பகுதியை சேர்ந்த முக்கிய தரப்பினர் 2 பேருக்கு இடையே தொழில் போட்டி நிலவி வருகிறது. எனவே, இதில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள், மற்றொரு தரப்பை கொலை செய்ய பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர வேறு எங்கேயும் குற்ற செயலில் ஈடுபட்டு வந்த கும்பல் போலீசாருக்கு பயந்து இரவு நேரத்தில் மட்டும் இந்த குளத்துக்குள் படுத்து தூங்கி விட்டு, காலையில் தப்பி சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேட்டை போலீசார் அந்த கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் பேட்டை பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story