துறையூர் அருகே லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு; சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது


துறையூர் அருகே லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு; சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
x
தினத்தந்தி 25 April 2019 11:00 PM GMT (Updated: 25 April 2019 8:47 PM GMT)

துறையூர் அருகே லாரி டிரைவரிடம் பணம் பறித்த சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காமாட்சிவாய நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது 32). டிரைவரான இவர் சேலத்தில் இருந்து நாமக்கல் வழியாக மண்ணச்சநல்லூருக்கு லாரியை ஓட்டிச்சென்றார். நேற்றுமுன்தினம் நள்ளிரவில் புலிவலம் வனக்காப்பு காட்டுப்பகுதியில் வந்தபோது டிரைவர் சந்திரசேகரன் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது புதரில் மறைந்திருந்த 7 பேர் திடீரென அங்கு வந்து சந்திரசேகரன் கழுத்தில் கத்தியை வைத்து, லாரியில் எவ்வளவு பணம் உள்ளது என்று கேட்டு மிரட்டினர். அதற்கு அவர் தன்னிடம் ரூ.2 ஆயிரத்து 500 மட்டுமே உள்ளது என்று கூறினார்.

அதை பறித்துக்கொண்ட அவர்கள், மேலும் பணம் இருக்கிறதா? என்று கேட்டு சந்திரசேகரனை துன்புறுத்தினர். அந்த வழியாக சென்றவர்கள் இதைக்கண்டு, அருகில் உள்ள கரட்டாம்பட்டி பொதுமக்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு அங்கு வந்தனர். அதைக் கண்ட மர்ம நபர்கள் 7 பேரும், தங்களுடைய இருசக்கர வாகனங்களில் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்களை பொதுமக்கள் விரட்டிச்சென்றனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், கரட்டாம்பட்டி சத்திரம் பகுதியில் எதிரே வந்த சைக்கிளில் மோதி கீழே விழுந்தனர்.

இதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்தார்கள். இதுபற்றி புலிவலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது பற்றி தகவல் கொடுத்து வெகுநேரம் ஆகியும் போலீசார் சம்பவ இடத்திற்கு வராததால், பொதுமக்கள் பிடிபட்ட 2 பேரையும் புலிவலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கண்ணனூரை சேர்ந்த பிரவீன்(21), சிவகுரு(22) என்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், அதே ஊரை சேர்ந்த கருணாகரன்(21), ராஜதுரை(19), மணிகண்டன்(19), 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் 2 பேர் என 5 பேரை பிடித்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 7 பேரும் சேர்ந்து, கண்ணனூர் மற்றும் சேனப்பநல்லூர், கெம்பியம்பட்டி, கங்காணிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அய்யாற்றில் இருந்து இரவு நேரங்களில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு, அதிகாரிகள் மற்றும் போலீசார் வருகிறார்களா என்று தகவல் கூறும் வேலையை செய்து வந்ததாகவும், 3 முறை வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story