சூலூர் இடைத்தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் பறக்கும்படையினர் தீவிர வாகனசோதனை
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர், நிலைக்கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்,
தமிழகம் முழுவதும் கடந்த 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கனகராஜ் திடீரென மரணமடைந்தார்.
இதைத்தொடர்ந்து சூலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதி திருப்பூர் மாவட்ட எல்லையில் இருப்பதால் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து, சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் நிலைக்கண்காணிப்பு குழுவினர் நேற்று முன்தினம் முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி ஒரு தொகுதியில் 9 பறக்கும் படை மற்றும் 3 நிலைக்கண்காணிப்பு குழுவினரும் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றியதை போல, இந்த இடைத்தேர்தலிலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்ய உள்ளனர்.
அந்த வகையில் திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட செல்லாண்டியம்மன் கோவில் படித்துறை பகுதி உள்ளிட்ட இடங்களில் வாகனசோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த ஆய்வு மற்றும் வாகன சோதனை பணி தேர்தல் முடியும் வரை தொடர்ந்து நடைபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story