கடலூரில், பெயிண்டர் மர்ம சாவு - போலீசார் விசாரணை
கடலூரில் பெயிண்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கடலூர்,
கடலூர் சொரக்கல்பட்டை சேர்ந்தவர் டேனியல். இவருடைய மகன் நற்கருணைநாதன் (வயது 48). பெயிண்டர். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட செல்வி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதையடுத்து அவர்களது மகனை நெய்வேலி வளையமாதேவியில் வசித்து வரும் டேனியல் கவனித்து வந்தார். நற்கருணைநாதன் மட்டும் தனியாக சொரக்கல்பட்டில் வசித்து வந்தார். இதற்கிடையே செல்வியை காப்பாற்றாமல் விட்டு, விட்டாயே என்று அவரது குடும்பத்தினர் அடிக்கடி வந்து நற்கருணைநாதனிடம் தகராறு செய்து வந்ததும், சமீபத்தில் நடந்த தகராறில் அவரை தாக்கி சென்றதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நற்கருணைநாதன் வீட்டில் இறந்து கிடப்பதாக டேனியலுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் விரைந்து வந்து மகனை பார்த்தார். அங்கு நற்கருணைநாதன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.
இது பற்றி அவர் கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த நற்கருணைநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே டேனியல் கடலூர் புதுநகர் போலீசில், தன்னுடைய மகன் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story