சமூக வலைத்தளத்தில், அவதூறாக வீடியோ வெளியிட்டவர் குண்டர் சட்டத்தில் கைது


சமூக வலைத்தளத்தில், அவதூறாக வீடியோ வெளியிட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 26 April 2019 4:15 AM IST (Updated: 26 April 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளத்தில் கலகத்தை விளைவிக்கும் வகையில் அவதூறாக வீடியோ வெளியிட்டவரை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 

விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மகன் மணிமாறன் (வயது 27). பா.ம.க. நகர துணை செயலாளராக உள்ளார். இவர் கடந்த 19-ந்தேதி விருத்தாசலம் போலீசில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், வன்னியர் சமுதாயத்தை பற்றி ஒருவர் தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வருவதாகவும், அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில், அந்த சமுதாயத்தை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டது விருத்தாசலம் மணலூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் சிவக்குமார் (40) என்று தெரிய வந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவரின் குற்றசெயலை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து சிவக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். அதன்பேரில் விருத்தாசலம் போலீசார் சிவக்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

Next Story