கொடைக்கானலில் பலத்த மழை நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது


கொடைக்கானலில் பலத்த மழை நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
x
தினத்தந்தி 25 April 2019 10:45 PM GMT (Updated: 25 April 2019 10:45 PM GMT)

கொடைக்கானலில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால் நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கொடைக்கானல்,

கொடைக்கானல் பகுதியில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது வரை நகர் பகுதியில் சுமார் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த மழை காரணமாக நட்சத்திர ஏரி, நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அப்சர்வேட்டரி உள்ளிட்ட சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த மழை காரணமாக வெள்ளிநீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, பியர்சோழா நீர்வீழ்ச்சி உள்பட பல்வேறு நீர் வீழ்ச்சிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அத்துடன் தொடர் மழை காரணமாக அதிகாலை 4 மணி அளவில் பெருமாள் மலையில் இருந்து குருசடி செல்லும் வழியிலும், பெருமாள்மலை அருகிலும் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று சாய்ந்து கிடந்த மரங்களை அகற்றினர். இந்த சம்பவத்தால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நட்சத்திர ஏரி நிரம்பும் தருவாயில் உள்ளது. நட்சத்திர ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீரானது வெள்ளி நீர்வீழ்ச்சி வழியாக பழனி பகுதியில் உள்ள அணைகளுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

Next Story