நாடாளுமன்ற தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி எடியூரப்பா பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி என்றும், சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மூத்த தலைவர்கள் ஈசுவரப்பா, பிரகலாத்ஜோஷி, ஆர்.அசோக், அரவிந்த் லிம்பாவளி, சி.டி.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்தும், சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயருக்கு கட்சி மேலிடத்தில் ஒப்புதல் கிடைத்துவிட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
22 தொகுதிகளில் வெற்றி
கர்நாடகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து விரிவாக விவாதித்தோம். தலைவா்கள் தங்களின் தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவு குறித்து எடுத்துக் கூறினர். அவர்கள் அளித்த தகவலின்படி, கர்நாடகத்தில் பா.ஜனதா 22 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. இந்த எண்ணிக்கையில் இருந்து ஒரு தொகுதி கூடுமே தவிர அதில் குறைய வாய்ப்பு இல்லை.
சட்டமன்ற இடைத்தேர்தல்
சிஞ்சோலி, குந்துகோல் ஆகிய சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்த தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் 2 தொகுதிகளுக்கு 2 பெயர்களை தேர்வு செய்து கட்சி மேலிடத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். கட்சி மேலிட தலைவர்கள், வேட்பாளர்களின் பெயா்களை நாளை (அதாவது இன்று) அறிவிப்பார்கள்.
ராமச்சந்திர ஜாதவ்
அந்த தொகுதிகளில் போட்டியிட விரும்பியவர்கள் அனைவரையும் அழைத்து பேசியுள்ளோம். கட்சியின் நலன் கருதி, தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படும்படி அறிவுறுத்தி இருக்கிறோம். அந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதாவை வெற்றி பெற வைக்க நாங்கள் தீவிர முயற்சி செய்வோம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
பா.ஜனதா சார்பில் சிஞ்சோலி தொகுதியில் டாக்டர் உமேஷ்ஜாதவ்வின் சகோதரர் ராமச்சந்திர ஜாதவ் மற்றும் குந்துகோல் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஐ.சிக்கனகவுடர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
எம்.எல்.ஏ.க்களின் பலம்
சட்டமன்ற இடைத்தேர்தலில் 2 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றால், சட்டசபையில் அக்கட்சியின் பலம் உயரும். தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலம் 104-ல் இருந்து 106 ஆக உயரும்.
Related Tags :
Next Story