போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கலெக்டர் வீரராகவராவ் எச்சரிக்கை
போக்சோ சட்டத்தின் கீழ் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் எச்சரித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம்,
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 என்பது இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து பாலின வித்தியாசமின்றி 18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும். இதனை சுருக்கமாக போக்சோ சட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்டம் வரும் முன்பாக, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
இப்பிரிவுகள் குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளை கையாண்டன. ஆனால் தற்போது 18 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவார்கள். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும் குற்றவாளிகள் இச்சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள்.
பாலியல் தாக்குதல், வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாச படம் எடுக்க குழந்தைகளை பயன்படுத்துதல் போன்றவற்றை குற்றங்களாக இச்சட்டம் முன் வைக்கிறது. இச்சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்திற்குள் வழக்கு முடிக்கப்பட வேண்டும். தண்டனை நிரூபணம் ஆகும் பட்சத்தில் சாதாரண சிறை தண்டனையில் இருந்து கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கிடைக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.
சில வகை பாலியல் வன்முறைக்கு கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக காவல் துறையினர், பாதுகாப்பு படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக்குரியவர்களே குற்றம் இழைக்கும்போது அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.
இச்சட்டத்தின்கீழ் குழந்தைகளை பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய போக்சோ கமிட்டி மூலம் மாவட்ட அளவில் புகார் பெற காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை அலுவலர்களிடம் கைப்பேசி வாயிலாகவும், நேரில் அல்லது தபால் மூலம் தொடர்பு கொண்டும் புகார்களை பதிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கமிட்டி தெரிவித்துள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜன் (94981 74099), குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு இன்ஸ்பெக்டர் விமலா (83000 01522), தலைமை காவலர் கேசவன்(94860 02161), பெண் தலைமை காவலர் காயத்ரி (83000 16259) உள்ளிட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story