ஆத்தூர் அருகே குடிநீர் லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
ஆத்தூர் அருகே குடிநீர் லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆத்தூர்,
ஆத்தூர் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களுக்கு அங்குள்ள கிணறுகளே குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள ஒரு விவசாய கிணற்றில் இருந்து லாரிகளில் தண்ணீர் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கல்லாநத்தம் கிராமத்தில் உள்ள மற்ற கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் குறைந்து வருவதாகவும், லாரிகள் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 7.15 மணிக்கு கல்லாநத்தம் கிராம மக்கள் கிணற்றுக்கு குடிநீர் எடுக்க வந்த லாரியை சிறைபிடித்ததுடன், காலிக்குடங்களுடன் கல்லாநத்தம்–ஆத்தூர் ரோட்டில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் ரூரல் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் புகார் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து காலை 8.15 மணிக்கு குடிநீர் லாரியை விடுவித்த கிராம மக்கள், சாலைமறியலையும் கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.