அந்தியூர் அருகே பட்டப்பகலில் துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 14½ பவுன் நகை திருட்டு மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
அந்தியூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 14½ பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அந்தியூர்,
அந்தியூர் அருகே ஆப்பக்கூடலை அடுத்துள்ள செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 64). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் வீடு அருகே உள்ளது. நேற்று காலை 9 மணி அளவில் மாரிமுத்து தனது குடும்பத்தினருடன் தோட்டத்தில் வேலைசெய்து கொண்டு இருந்தார்.
வேலையை முடித்துவிட்டு அனைவரும் மதியம் 1 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவின் பூட்டும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
அதில் இருந்து துணிமணிகள், பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த தங்கசங்கிலி, மோதிரம், தாலிக்கொடியை காணவில்லை. இது 14½ பவுன் ஆகும்.
வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட யாரோ மர்மநபர் பூட்டை உடைத்துள்ளார். பின்னர் உள்ளே புகுந்து பீரோவை திறந்து அதில் இருந்த 14½ பவுன் நகையை திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளது தெரிய வந்தது.
இதுகுறித்து மாரிமுத்து ஆப்பக்கூடல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிவிட்டு தப்பிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story