விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 5 ஆண்டு சிறை - விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு


விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 5 ஆண்டு சிறை - விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 April 2019 3:45 AM IST (Updated: 26 April 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கரசானூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் தெய்வசிகாமணி மகன் ஞானவேல் (வயது 34), விவசாயி. இவருடைய தந்தை பெயரில் அதே கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தெய்வசிகாமணி தனது மகன்கள் ஞானவேல், நந்தகோபால், சிவா ஆகியோருக்கு கடந்த 20.9.2010 அன்று பாகப்பிரிவினை செய்து கொடுத்தார். இதன் மூலம் கிடைத்த நிலத்தை பட்டா மாற்றம் செய்ய ஞானவேல் முடிவு செய்தார். இதற்காக அவர் கடந்த 4.2.2011 அன்று வானூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த நெமிலி குறுவட்ட நில அளவையரான சேகர்(55) என்பவரை அணுகி தனது தந்தை பெயரில் இருக்கும் நிலத்தை அளவீடு செய்து, தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரும்படி கேட்டுள்ளார்.

இதற்கு நில அளவையாளர் சேகர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து சேகர், துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே சேகர், பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா, குற்றம் சாட்டப்பட்ட சேகருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சேகர், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story