ஊத்துக்குளியில் பரபரப்பு ஓடும் பஸ்சில் விஷ ஊசி போட்டதாக பிளஸ்-1 மாணவி புகார் முதியவரிடம் போலீஸ் விசாரணை


ஊத்துக்குளியில் பரபரப்பு ஓடும் பஸ்சில் விஷ ஊசி போட்டதாக பிளஸ்-1 மாணவி புகார் முதியவரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 27 April 2019 4:00 AM IST (Updated: 27 April 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளியில் ஓடும் பஸ்சில் விஷ ஊசி போட்டதாக பிளஸ்-1 மாணவி புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

ஊத்துக்குளி,

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பாளையக்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அந்த பிளஸ்-1 மாணவி திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்வதற்காக பல்லகவுண்டம்பாளையம் செல்லும் அரசு பஸ்சில் சென்றார். அந்த பஸ்சில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

அப்போது கவுண்டம்பாளையம் நால்ரோடு அருகே பஸ் வந்த போது திடீரென்று பிளஸ்-1 மாணவி தனக்கு யாரோ விஷ ஊசி போட்டு விட்டதாக அலறினார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பீதி அடைந்து பஸ்சை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார்கள். டிரைவரும் பஸ்சை நிறுத்தினார். அப்போது அந்த மாணவி தன் அருகே நின்றிருந்த முதியவர் தான் தனக்கு விஷ ஊசி போட்டு விட்டார். இதனால் எனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறி பதற்றத்துடன் காணப்பட்டார்.

உடனே அங்கிருந்த பயணிகள் அந்த முதியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊத்துக்குளிக்கு டிக்கெட் எடுத்து இருந்த அந்த முதியவர் உடனே பஸ்சை விட்டு கீழே இறங்கினார். இதில் சந்தேகம் அடைந்த பயணிகள் அந்த முதியவரை பிடித்து ஊத்துக்குளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையே ஓடும் பஸ்சில் பிளஸ்-1 மாணவிக்கு விஷ ஊசி போட்டு விட்டதாக ஊத்துக்குளி பகுதியில் தகவல் பரவியது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் விஷ ஊசி போட்டதாக கூறிய பிளஸ்-1 மாணவியை சிகிச்சைக்காக ஊத்துக்குளி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதன்பிறகு பிடிபட்ட முதியவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர் வைத்திருந்த பையை பரிசோதித்தனர். அதில் வங்கி கணக்கு புத்தகமும், அவரது உடைமைகளும் இருந்தன. தான் மாணவிக்கு விஷ ஊசி எதுவும் போடவில்லை என்றும், தான் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் என்பதையும் அந்த முதியவர் எடுத்து கூறினார். கூட்ட நெரிசலில் பையை திறந்த போது அதில் இருந்த கொக்கி, மாணவியின் மீது பட்டதால் பயத்தில் மாணவி தனக்கு விஷ ஊசி போட்டதாக கூறி விட்டார் என்று தெரிவித்தார். இதற்கிடையே மாணவிக்கு அரசு ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அது மட்டுமின்றி ஊசி போட்டதற்கான தடயம் எதுவும் இருக்கிறதா? எனவும் டாக்டர்கள் சோதித்து பார்த்தனர். எந்த தடயமும் இல்லை. அது மட்டுமில்லாமல் 2 மணி நேரம் ஆகியும் மாணவிக்கு எந்த உடல் உபாதையும் ஏற்படவில்லை. நலமுடன் இருந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டர் பரிசோதனை நடத்தியதில் விஷ ஊசி போட்டதற்கான வாய்ப்பு இல்லை என தெரிந்ததால் மாணவி கூறிய தகவல் தவறானது என்பதை போலீசார் அறிந்து கொண்டனர். அதன்பிறகு 2 பேரிடமும் போலீசார் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

Next Story