புயல் எச்சரிக்கை: அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கவேண்டும் கலெக்டர் விக்ராந்த் ராஜா அறிவுறுத்தல்


புயல் எச்சரிக்கை: அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கவேண்டும் கலெக்டர் விக்ராந்த் ராஜா அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 27 April 2019 3:00 AM IST (Updated: 27 April 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

புயல் எச்சரிக்கை எதிரொலியாக காரைக்கால் மாவட்ட அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று கலெக்டர் விக்ராந்த் ராஜா அறிவுறுத்தினார்.

காரைக்கால், 

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால் தமிழகம், புதுவைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் 30-ந் தேதி வரை மிக கன மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா தலைமை தாங்கினார். துணை கலெக்டர்கள் ஆதர்ஸ், பாஸ்கரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் விக்ராந்த் ராஜா பேசியதாவது:-

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கடலோர மாவட்டமான காரைக் காலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகிறது. கடந்த கஜா புயலின்போது, எந்தவித உயிர்சேதமும் இன்றி சிறப்பாக செயல்பட்ட காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள், இந்த முறையும் சிறப்பாக செயல்படவேண்டும்.

சாய்வாக உள்ள மின் கம்பங்களை மின்துறையினர் உடனடியாக சரி செய்யவேண்டும். மின் கம்பங்களுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். பொதுப்பணித்துறை, நகராட்சி, கல்வித்துறை, நலவழித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும்.

குடிநீர், கழிவறை மற்றும் ஜெனரேட்டர் வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்லாதவாறு மீன்வளத்துறையினர் மீனவர் களுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். தாழ்வான பகுதிகள் மற்றும் குடிசை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களை உஷார் படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் வங்கக் கடலில் உருவாகி உள்ள பானி புயல் தீவிரமடைந்து வருவதன் காரணமாக காரைக்கால் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதையடுத்து காரைக்கால் மீனவர்கள் தங்கள் படகுகளை அரசலாற்றங்கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை.

மீன்பிடி தடைகாலம் நடைபெறுவதால் பைபர் படகுகளில் குறைந்த தூரம் சென்று மீன்பிடித்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் புயல் எச்சரிக்கை காரணமாக மீன்பிடிக்க செல்லாததால் தங்களது படகுகளை கரையில் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைபடகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டு பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பைபர் படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. மீன்பிடிக்க செல்லாததால் வருமானம் இன்றி மீனவர்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

Next Story