திருப்பரங்குன்றம் தொகுதியில் வேட்பாளர், தலைவர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுக்க தடை கோரி வழக்கு - மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


திருப்பரங்குன்றம் தொகுதியில் வேட்பாளர், தலைவர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுக்க தடை கோரி வழக்கு - மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
x
தினத்தந்தி 27 April 2019 4:00 AM IST (Updated: 27 April 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் தொகுதியில் வேட்பாளர், தலைவர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுக்க தடை விதிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. மதுரை திருநகரைச் சேர்ந்த தங்கலட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (மே மாதம்) 19-ந்தேதி நடைபெற உள்ளது. தற்போது இந்த தேர்தலுக்காக வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுவை தாக்கல் செய்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரதான அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் திருப்பரங்குன்றம் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். அந்த சமயத்தில் வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுக்கின்றனர்.

ஆரத்தி எடுப்பவர்களுக்கு 200 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை அன்பளிப்பு வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. இந்திய தண்டனை சட்டப்படி குற்றச்செயலாகும். எனவே வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுப்பதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story