அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லாததால் நர்சுகள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது உறவினர்கள் போராட்டம்


அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லாததால் நர்சுகள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 April 2019 2:23 AM IST (Updated: 27 April 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் இல்லாததால் நர்சுகள் பிரசவம் பார்த்தனர். இதனால் குழந்தை இறந்தது. இதையடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

வேலூர் மாவட்டம் பிச்சிவாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 22). இவர் தக்கோலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சினேகா(20). நிறைமாத கர்ப்பிணியான சினேகா பிரசவத்திற்காக திருவள்ளூரை அடுத்த ராமஞ்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வந்து தங்கினார். இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி பிரசவவலி ஏற்பட்டு வலியால் துடித்தார். அவரது உறவினர்கள் அவரை பட்டரைபெரும்புதூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பணி முடித்து சென்று விட்டதால் பணியில் இருந்த நர்சுகள் சினேகாவிற்கு பிரசவம் பார்த்தாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் சினேகாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை எந்த அசைவும் இன்றி இருந்தது. மேலும் சினேகாவிற்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதை பார்த்த நர்சுகள் தாயையும் குழந்தையையும் உடனடியாக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போராட்டம்

சினேகாவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சினேகாவின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு நர்சுகள் பிரசவம் பார்த்ததால்தான் குழந்தை இறந்து விட்டது. சினேகாவிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் இதுகுறித்து தக்க விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் மருத்துவர்கள் சினேகாவை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பட்டரைபெரும்புதூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நர்சுகள் பணியிட மாற்றம்

இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பட்டரைபெரும்புதூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் பணியை முடித்துவிட்டு சென்று விட்டனர். அப்போது பணியில் இருந்த நர்சுகள் சினேகாவிற்கு பிரசவம் பார்த்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிரசவம் பார்த்த 2 நர்சுகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கமிட்டி அமைத்து விசாரணை செய்து பின்னர் அதன் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story