சென்னை விமான நிலையத்தில் ஆமதாபாத் விமானத்தில் எந்திர கோளாறு 184 பேர் உயிர் தப்பினர்
சென்னை விமான நிலையத்தில் ஆமதாபாத் விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு ஆமதாபாத்துக்கு தனியார் விமானம் செல்ல இருந்தது. அதில் 179 பயணிகளும், 5 விமான சிப்பந்திகளும் பயணம் செய்ய தயாராக இருந்தனர்.
விமானம் நடைமேடையில் இருந்து புறப்பட்டு ஓடுபாதைக்கு சென்று கொண்டு இருந்தபோது திடீரென எந்திரகோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக ஓடுபாதை அருகே அவசரமாக விமானத்தை நிறுத்திய அவர், இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து விமானம், மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் விரைந்துவந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கோளாறை சரிசெய்ய தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் 5¾ மணிநேரம் தாமதமாக மதியம் 12.45 மணிக்கு அந்த விமானம் பயணிகளுடன் ஆமதாபாத் புறப்பட்டு சென்றது.
விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி உரிய நேரத்தில் கண்டுபிடித்து விட்டதால் அதில் இருந்த 184 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Related Tags :
Next Story