2-வது மனைவியை கொலை செய்த வழக்கு: தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்


2-வது மனைவியை கொலை செய்த வழக்கு: தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்
x

2-வது மனைவியை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி சிக்கினார்.

பெங்களூரு,

கோலார் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 41). இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த மாலா என்ற பெண்ணுக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்கள் பெங்களூருவில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக மாலாவை, சங்கர் கொலை செய்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு பெங்களூரு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், மாலாவை கொலை செய்த சங்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2011-ம் ஆண்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

2-வது திருமணம்

இந்த நிலையில் பரோலில் வெளியே வந்த சங்கர் கோலாரை சேர்ந்த ரேணுகா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் பரோல் முடிந்ததும் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சங்கருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை போலீசார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் சங்கர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி சென்று விட்டார்.

கைது

இதற்கிடையே பிப்ரவரி மாதம் 18-ந் தேதி மெஜஸ்டிக்கில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சங்கரின் 2-வது மனைவி ரேணுகா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி உப்பார்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிய சங்கர், ரேணுகாவை கொலை செய்ததும், தலைமறைவானதும் தெரியவந்தது.

இதையடுத்து சங்கரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் சங்கரை உப்பார்பேட்டை போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story