சி.எஸ்.எம்.டி. நிலையத்தில் பரபரப்பு பிளாட்பார தடுப்பு கம்பியில் மின்சார ரெயில் மோதியது


சி.எஸ்.எம்.டி. நிலையத்தில் பரபரப்பு பிளாட்பார தடுப்பு கம்பியில் மின்சார ரெயில் மோதியது
x
தினத்தந்தி 27 April 2019 4:00 AM IST (Updated: 27 April 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் பிளாட்பார தடுப்பு கம்பியில் மின்சார ரெயில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை,

மத்திய ரெயில்வேயின் தலைமை அலுவலகமான மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்து மெயின் மற்றும் துறைமுக வழித்தடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 1 மற்றும் 2-ம் எண் பிளாட்பாரத்தில் இருந்து துறைமுக வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நேற்று மாலை வாஷியில் இருந்து வந்த ஒரு மின்சார ரெயில் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தின் 1-ம் எண் பிளாட்பாரத்துக்கு வந்து கொண்டிருந்தது.

தடுப்பு கம்பி மீது மோதியது

அப்போது அந்த ரெயில் வழக்கமாக நிற்கும் இடத்தில் நிற்காமல் முன்னால் உள்ள பிளாட்பார தடுப்பு இரும்பு கம்பி மற்றும் அங்குள்ள சிக்னல் கம்பத்தின் மீது மோதி நின்றது. மெதுவாக வந்து மோதியதால் சிக்னல் கம்பமோ, பிளட்பார தடுப்பு கம்பிகளோ சேதம் அடையவில்லை. அதே நேரத்தில் தடுப்பு கம்பி மீது ரெயில் மோதிய சத்தம்கேட்டு அங்கிருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர்.

மோட்டார் மேன் பிரேக்கை அழுத்த தவறியதால் தடுப்பு கம்பியில் மின்சார ரெயில் மோதியது தெரியவந்தது. இது தொடர்பாக மோட்டார் மேனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story