இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி, ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் - தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதி
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து மதுரை ரெயில்நிலையம் உள்பட மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில்நிலையங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை,
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட ரெயில்நிலையங்களில் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதற்காக மதுரை ரெயில்நிலையத்தில் நேற்று முழுவதும் பயணிகளின் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே ரெயில்நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டது.
மேலும், ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் ஜெகநாதன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் சிவசங்கரன், தமிழக ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு மன்னர் மன்னன் தலைமையில் ரெயில்வே போலீசார் இணைந்து ரெயில்நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, ரெயிலின் பெட்டிகளில் பாதுகாப்பு படை போலீஸ் மோப்ப நாய் ரோவர் உதவியுடன் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.
பின்னர், ரெயில்நிலையத்துக்குள் வரும் பயணிகள், வழியனுப்ப வரும் உறவினர்கள் ஆகியோர் ஸ்கேனர் கருவி மூலம் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்த சோதனை மதுரையில் இருந்து சென்னை புறப்பட்ட பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் தென்மாவட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்திலும் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் ரெயில் பாதையில் உள்ள தண்டவாளபகுதி, மானாமதுரை செல்லும் தண்டவாள பகுதி, பாம்பன் பாலம், விருதுநகர் செல்லும் தண்டவாள பகுதி ஆகியவற்றில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்புப்படை போலீசார் ஆகியோர் சாதாரண உடையிலும் ரெயில்நிலையத்துக்குள்ளும், ரெயில் நிலைய வளாகத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் ரெயில்நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பண்டல்களும் மோப்பநாய் மூலம் சோதனை செய்யப்பட்டன. மேலும் மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திண்டுக்கல், நெல்லை, ராமேசுவரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, செங்கோட்டை மற்றும் புனலூர் ஆகிய முக்கிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story