புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
புயல் பாதிப்பை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கக் கடலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவண்ணம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலெக்டர் சிவஞானம் கூறியதாவது:-
வங்கக் கடலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறி வருகிற 30 மற்றும் 1-ந்தேதிகளில் கரையைக் கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆகவே இப்புயலினால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வதற்கு அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மேலும் கால்வாய்கள், வடிகால்கள் ஆகியவற்றில் உள்ள அடைப்புகளை அகற்றி மழைநீர் தங்கு தடையின்றி செல்ல வழிசெய்தல் வேண்டும். மழை வெள்ளத்தினால் வீடுகள் பாதிக்கப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கான பாதுகாப்பு மையங்களை ஏற்பாடு செய்தல் வேண்டும்.
மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்படும் இடங்களில் அவற்றை உடனுக்குடன் அகற்றுதல், ரெயில்வே கீழ்நிலை பாலங்களில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றுதல் உள்ளிட்ட பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புயலினால் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வதற்கு அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் சரியான முறையில் மேற்கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்தில்குமாரி மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி, பொதுப்பணித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, காவல் துறை அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story