போடி அருகே தேர்தலை புறக்கணித்த மக்களுடன் சப்-கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை - ஆபத்தான மலைப்பாதையில் 15 கி.மீ. தூரம் நடந்து சென்றனர்


போடி அருகே தேர்தலை புறக்கணித்த மக்களுடன் சப்-கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை - ஆபத்தான மலைப்பாதையில் 15 கி.மீ. தூரம் நடந்து சென்றனர்
x
தினத்தந்தி 27 April 2019 4:15 AM IST (Updated: 27 April 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே தேர்தலை புறக்கணித்த மலை கிராமங்களை சேர்ந்த மக்களிடம், சப்-கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் நடந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

தேனி,

கடந்த 18-ந்தேதி தேனி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் உள்ள சென்டிரல் ஸ்டேஷன், முட்டம், முதுவார்குடி ஆகிய 3 மலை கிராமங்களையும் சேர்ந்த மக்கள் புறக்கணித்தனர். இதையடுத்து இந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும், அவர்களின் குறைகளை கேட்டறியவும் உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று நேரில் சென்றனர்.

இதற்காக அவர்கள் குரங்கணியில் இருந்து முதுவார்குடிக்கு ஜீப்பில் செல்ல திட்டமிட்டனர். அதையொட்டி குரங்கணியில் உள்ள ஜீப் உரிமையாளர்களிடம் ஜீப்களை கேட்டனர். ஆனால் அவர்கள் மக்களுக்கு ஆதரவாக ஜீப் கொடுக்க முதலில் மறுப்பு தெரிவித்தனர். பின்னர், மக்களின் நலனை கருத்தில் கொண்டு தான் பேச்சுவார்த்தை நடத்தச் செல்கிறோம் என்று அதிகாரிகள் கூறியதால் ஜீப்களை கொடுக்க உரிமையாளர்கள் முன் வந்தனர்.

ஆனால், முதுவார்குடி செல்லும் மலைப்பாதையில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள சோதனை சாவடி பூட்டப்பட்டு இருந்ததால், அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். சோதனை சாவடியில் இருந்த பூட்டுக்கான சாவி தன்னிடம் இல்லை என்று அங்கு பணியில் இருந்த வனத்துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் குரங்கணியில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முதுவார்குடி கிராமத்துக்கு நடந்து செல்ல முடிவு செய்தனர். சப்-கலெக்டர் வைத்திநாதன் தலைமையிலான குழுவினர் கரடு முரடான மலைப்பாதையில் மிகுந்த சிரமத்துக்கு இடையே நடந்து சென்றனர். அவர்களுடன் குரங்கணி பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலரும் உடன் சென்றனர்.

முதலில் முதுவார்குடி கிராமத்துக்கு சென்று அங்கு இருந்த மக்கள் மற்றும் விவசாயிகளிடம் பிரச்சினைகளை கேட்டறிந்தனர். பின்னர் அங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்டிரல் ஸ்டேஷன் கிராமத்துக்கு சப்-கலெக்டர் உள்பட அதிகாரிகள் குழுவினர் நடந்து சென்றனர். இது ஒத்தையடி பாதையாக இருந்தது. மிகவும் ஆபத்தான செங்குத்து மலைகளை கடந்து செல்ல வேண்டிய பாதையாக இருந்தது. ஆங்காங்கே நின்று சிறிதுநேரம் ஓய்வு எடுத்த நிலையில், சிரமத்துடன் நடந்து சென்றனர்.

சென்டிரல் ஸ்டேஷன் கிராமத்துக்கு சென்று பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தினர். மக்களிடம் சப்-கலெக்டர் வைத்திநாதன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதில், குரங்கணி, முதுவார்குடி, டாப்ஸ்டேஷன், முட்டம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு தங்களின் குறைகள், கோரிக்கைகளை தெரிவித்தனர். அப்போது கிராமமக்கள் கூறியதாவது:-

‘3 மாதங்களுக்கு முன்பு முதுவார்குடி கிராமத்துக்கு ஜீப் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த கிராமங்களில் கர்ப்பிணிகள், முதியவர்கள் நலன் கருதியும், விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். அவர்கள் எங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய நாளில் கூட ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஜீப் வருவதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால் அவரை டோலி கட்டி தூக்கிச் சென்றோம். சாலை வசதி கேட்டு பல தலைமுறைகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் செவி சாய்க்காததால் நாங்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். எங்கள் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறோம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இன்னும் பட்டா கிடைக்கவில்லை. முன்பு சென்டிரல் ஸ்டேசனில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்தனர். தற்போது சுமார் 40 குடும்பத்தினர்தான் உள்ளனர். வனத்துறையினர் கெடுபிடியாலும், விவசாயம் செய்ய முடியாமலும் இடம் பெயர்ந்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மக்கள் பலரிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, அதை முழுமையாக அதிகாரிகள் குறிப்பு எடுத்துக் கொண்டனர். இதுகுறித்து சப்-கலெக்டர் வைத்திநாதன் கூறுகையில், ‘இந்த சம்பவம் குறித்து தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அவர்கள் விரிவான அறிக்கை அளிப்பார்கள். அதை வைத்து மாவட்ட கலெக்டருக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த மக்கள் தங்களுக்கு மலைப்பாதை வசதி, ஜீப்கள் இயக்க அனுமதி கேட்கிறார்கள். அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். முதுவார்குடியில் இருந்து வாக்களிப்பதற்காக சென்டிரல் ஸ்டேஷன் வரும் பாதை மிகுந்த சிரமமானதாக உள்ளது. எனவே, கிராமமக்கள் வசிக்கும் பகுதியிலேயே வாக்குச்சாவடியை மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

பின்னர், அங்கிருந்து அதிகாரிகள் குழுவினர் மற்றொரு பாதை வழியாக சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்து குரங்கணிக்கு வந்தனர். மொத்தத்தில் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் அதிகாரிகள் நடந்து சென்று மக்களை சந்தித்து உள்ளனர். இந்த ஆய்வில் போடி தாசில்தார் மணிமாறன், மண்டல துணை தாசில்தார் ராமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் செல்வி, வருவாய் ஆய்வாளர் ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story