குழந்தைகள் விற்பனை வழக்கில் மேலும் 2 புரோக்கர்கள் கைது


குழந்தைகள் விற்பனை வழக்கில் மேலும் 2 புரோக்கர்கள் கைது
x
தினத்தந்தி 27 April 2019 11:00 PM GMT (Updated: 27 April 2019 5:35 PM GMT)

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 புரோக்கர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். இதற்கிடையே குழந்தை காணாமல் போனதாக ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பெண்ணும் புகார் செய்தார்.

ராசிபுரம்,

குழந்தைகள் விற்பனை செய்வது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற நர்சு அமுதவள்ளி (வயது 50) என்பவர் தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம் பேசுவது போன்ற வாட்ஸ்-அப் ஆடியோ ஒன்று வெளியாகி நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிப்படை போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அமுதவள்ளி குழந்தைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவரையும், அவருக்கு உதவியாக இருந்த அவரது கணவர் ரவிச்சந்திரன், மற்றொரு நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லிமலை செங்கரை பவர்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்த முருகேசன் புரோக்கராக செயல்பட்டு, கொல்லிமலை பகுதிகளில் குழந்தைகளை வாங்கி தந்ததும், விற்பனை செய்ய ஈரோட்டை சேர்ந்த நர்சு பர்வீன், அருள்சாமி, ஹசீனா ஆகியோர் துணை புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் மூவரும் ஈரோடு, கோவை, வேலூர் ஆகிய இடங்களில் தனியார் செயற்கை கருத்தரிப்பு செய்யும் மருத்துவமனைகளில் குழந்தை இல்லாதவர்களுக்கு கருமுட்டை கொடுத்து, அதற்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெற்று வந்து உள்ளனர். அத்துடன் விதவை, கணவனால் கைவிடப்பட்ட வறுமையில் உள்ள தகுதியான பெண்களை கருமுட்டை தானம் செய்ய அழைத்து சென்று புரோக்கர்களாக செயல்பட்டு, அவ்வாறு கருமுட்டை தானம் செய்யும் ஒரு பெண்ணிற்கு கமிஷனாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை பெற்று கொடுத்து உள்ளனர். அந்த கால கட்டத்தில் செயற்கை கருவூட்டல் சிகிச்சை முறையில் குழந்தை பிறக்காது என தெரிந்த தம்பதியினரிடம் நட்பு ஏற்படுத்திக்கொண்டு, குழந்தைகளை வாங்கி தருவதாக கூறிவந்து உள்ளனர். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் பின்னர் குழந்தைகளை விற்பதற்கு துணை புரோக்கர்களாக அவர்கள் செயல்பட்டு வந்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் துணை புரோக்கர்களான ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த அருள்சாமி (47) மற்றும் ஈரோடு மாமரத்துபாளையம் ஹசீனா (26) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். தனிப்படை போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மூலம் சுமார் 13 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. இதில் ஒரு குழந்தை கொல்லிமலையில் பெறப்பட்டு, தென்மாவட்டம் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த குழந்தை தத்து கொடுக்கப்பட்டது போன்ற பத்திர நகல் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதில் பெயர் இடம்பெற்றுள்ள வக்கீல்களிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.

இதற்கிடையே குழந்தை விற்பனை செய்வதில் அமுதவள்ளியுடன் யார்? யார்? தொடர்பு வைத்து உள்ளனர்? என்பதை கண்டுபிடிக்க திருச்செங்கோடு, ஈரோடு, திருச்சி, கொல்லிமலை, குமாரபாளையம், சேலம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அமுதவள்ளி குழந்தைகளை விற்பனை செய்து யார், யாரிடம் பணம் பெற்று உள்ளார் என்பதை அறிய அவரது வங்கி கணக்கையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

சேத்தியாதோப்பு பால்வாய்க்கால் பகுதியை சேர்ந்த சுந்தரபாண்டியன்-ராஜகுமாரி தம்பதியினருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்து உள்ளது. ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் 2-வது நாள் அந்த குழந்தை காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

இது பற்றி அப்போது அவர்கள் ஜெயங்கொண்டம் போலீசில் புகார் செய்தனர். ஆனால் இதுவரை அந்த ஆண் குழந்தையை பற்றி எந்தவிதமான துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ராசிபுரத்தில் குழந்தை விற்பனை பற்றிய செய்தியை கேள்விப்பட்டதும் ஜெயங்கொண்டம் போலீசாருடன் ராஜகுமாரி ராசிபுரம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்தார்.

ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவனிடம் ராஜகுமாரி தன் குழந்தை பிறந்த 2-வது நாளில் தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து காணாமல் போனது குறித்தும், ஆஸ்பத்திரியில் அந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை காட்டியும், தன் குழந்தையை பற்றிய விவரத்தை கூறினார். ஆனால் தற்போது ராசிபுரத்தில் கைதானவர்கள் குழந்தையை விற்பனை செய்யப்பட்டதாகவே கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், குழந்தை கடத்தல் வழக்கில் அவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். அதன்பேரில் ராஜகுமாரி அவரது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார். குழந்தைகள் விற்பனை வழக்கில் தினமும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவதால் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story